Saturday, January 16, 2010

என் மன வானில் இடியாய் இறங்கிய பூகம்பம்

ஜனவரி12 2010ல் ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. . இந்தப் பூகம்பமானது ரிக்ட்டர் அளவுகோலில் 7.0 எனப் பதிவாகியுள்து. ஏற்கனவே உள் நாட்டில் இடம்பெற்ற போர் மற்றும் வன்முறைகளினால் ஹெய்ட்டியானது மிகமோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது ஹெய்ட்டியானது பன்னாட்டு உதவிக்காக வேண்டுகோள் விடுத்துள்ளது

ஹைதி தலைநகர் போர்ட்-அவ்-பிரின்ஸ் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், அந்த சிறிய நாடு துவம்சமாகிப் போனது.

நில நடுக்கத்தைத் தொடர்ந்து 13 நில அதிர்வுகள் ஏற்பட்டதால் ஹைதி நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் செயல் இழந்தன. இதன் காரணமாக சீட்டுக் கட்டுக்கள் சரிந்தது போல சரிந்து சிதறிக் கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் இருந்து மக்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் மிகமிக பின் தங்கியுள்ள ஹைதி நாட்டில் மீட்பு கருவிகள் போதுமான அளவுக்கு இல்லை. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மீட்புக் குழுக்கள் ஹைதி நாட்டுக்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா 3500 ராணுவ வீரர்களை மீட்புப் பணியில் ஈடுபடுத்தி உள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பலர் முதல் உதவி சிகிச்சை பெற இயலாமல் தவித்தப்படி உள்ளனர். பெரிய கட்டிட இடிபாடு களை அகற்றுவதில் மீட்புக் குழுவினர் கடும் சவால்களை சந்தித்து வருகிறார்கள். இதனால் மீட்பு பணிகள் மெல்லதான் நடக்கிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் வரை இருக்கலாம் என்று செஞ்சிலுவை சங்கம் கூறி இருந்தது. ஆனால் நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 1 லட்சத்தை தாண்டி உள்ளதாக இன்று காலை தகவல் வெளியானது. பல லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

தலைநகர் போர்ட்- அவ்-பிரின்சில் சுமார் 60 சதவீத வீடுகள் நொறுங்கிவிட்டன. ஹைதியின் மற்ற நகரங்களிலும் கடும்சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 30 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.அவர்கள் அனைவரும் சாலையோரங்களில் குடியேறியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்க இயலாத நிலையில் ஹைதி நாட்டு அரசு தவிப்புக்குள்ளாகி இருக்கிறது. கட்டிட இடிபாடு களுக்குள் சிக்கி உயிருக்குப்போராடி கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவதா, உயிருடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதா என்று ஹைதி அதிகாரிகள் திண்டாடியபடி உள்ளனர்.

போர்ட்- அவ்-பிரின்ஸ் நகரில் மக்கள் உணவு, குடி தண்ணீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை நடுரோட்டில் வைத்தும் சில இடங்களில் மறியல் நடந்தது.

ஆத்திரத்துடன் காணப்படும் மக்களை அதிகாரிகளால் சமரசம் செய்ய முடியவில்லை. இதையடுத்து வெளிநாட்டு உதவிக்குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை வினியோகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் உயிருடன் தவித்துக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நவீன கருவிகள் மூலம் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்ற சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காவல்துறையினர், தங்கள் குடும்பத்து உறுப்பினர்களை மீட்பதிலும், புதைப்பதிலும்தான் தீவிரமாக உள்ளனர். இதனால் போலீஸ் உதவி பெரும்பாலானவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஹைதி நாட்டு டாக்டர்கள் இரவு- பகலின்றிசிகிச்சை யளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தேவையான அளவுக்கு மருந்து, மாத்திரைகள் இல்லாததால் அவர்களும் திணறியபடி உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்றுள்ள உதவிக்குழுக்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து கொடுத்து வருகிறார்கள். ஆனால் பொது மக்கள் தண்ணீர், உணவு தாருங்கள் என்றே கேட்கிறார்கள்.

ஏராளமான நாடுகள் நடமாடும் மருத்துவக் குழுக்களை ஹைதி நாட்டுக்கு அனுப்பியுள்ளன. உறவினர்களை இழந்து தவிப்பவர்களை ஆறுதல் கூறி தேற்ற மனநல மருத்துவர் களும் சென்றுள்ளனர். கியூபா நாடு 300 டாக்டர் களை அனுப்பி உதவியுள்ளது.

இந்தியா பண உதவி செய்துள்ளது. ஹைதி நாட்டில் சுமார் 200 இந்தியர்கள் இருந்தனர். அவர்கள் கதி என்ன ஆனது இன்னமும் தெரியவில்லை.

உலகில் மோசமான உயிர்ச் சேதங்களினை ஏற்படுத்திய சில முக்கியமான பூமியதிர்ச்சிகள்

2005ம் ஆண்டு அக்டோபர் 08ல் பாகிஸ்தானின் காஷ்மீர் பிராந்தியத்தினை 7.6 ரிக்ட்டர் அளவில் தாக்கிய பூமியதிர்ச்சியின் காரணமாக 80000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் கொல்லப்பட்ட மக்களின் தொகை 100000 இரு்ககுமென மதிப்பிடப்பட்டது.

2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 9.3 ரிக்ட்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக இந்து மகா கடலில் உருவாகிய சுனாமிப்யின் காரணமாக 230210 மக்கள் கொல்லப்பட்டனர்.

1976ம் ஆண்டு ஜூலை 28ல் சீனாவின் டங்ஷன் பிராந்தியத்தில் 7.5 ரிக்ட்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 255000 மக்கள் (உத்தேசமாக) கொல்லப்பட்டனர். ஆனாலும் கொல்லப்பட்ட மக்களின் தொகை 655000 இருக்கும் என மதிப்பிடப்பட்டது

1948ம் ஆண்டு அக்டோபர் 06ல் துர்க்மெனிஸ்தான் அஷ்காவட் பிராந்தியத்தில் 7.3 ரிக்ட்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 111000 மக்கள் கொல்லப்பட்டனர்.

1923ம் ஆண்டு செப்டம்பர் 01ல் ஜப்பானின் கண்டோ பிராந்தியத்தினை 7.9 ரிக்ட்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 143000 மக்கள் கொல்லப்பட்டனர்.

1920ம் ஆண்டு டிசம்பர் 16ல் சீனாவின் நிங்ஷியா-ஹன்சு(ஹையுவான்) பிராந்தியத்தில் பூகம்பத்தில் 200000 மக்கள் கொல்லப்பட்டனர்.

1556ம் ஆண்டு ஜனவரி 23ல் சீனாவின் ஷான்சி என்னுமிடத்தில் 8.0 ரிக்ட்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 830000 மக்கள் கொல்லப்பட்டனர்

1138ம் ஆண்டு அக்டோபர் 11ல் சிரியாவின் அலெப்போ பிராந்தியத்தில் 8.5 ரிக்ட்டர் அளவில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 230000 மக்கள் கொல்லப்பட்டனர்

893 ம் ஆண்டு மார்ச் 23ல் ஈரானின் அர்டாவில் பிராந்தியத்தில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 150000 மக்கள் கொல்லப்பட்டனர்.

856ம் ஆண்டு டிசம்பர் 22ல் ஈரானின் தம்ஹன் என்ற இடத்தில் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 200000 மக்கள் கொல்லப்பட்டனர்.

526ம் ஆண்டு மே 20ல் அண்டிஒச் பய்ஷான்ரின் பேரரசினைத் தாக்கிய பூகம்பத்தின் காரணமாக 250000 மக்கள் கொல்லப்பட்டனர்